உரையாசிரியர் மரபு

உரையாசிரியர் மரபு

ஒரு மொழி தோன்றிய காலத்திலேயே உரைநடை பேச்சு வழக்காக தோற்றம் பெற்றுருக்க வேண்டுமென பொதுவாக கருதபடுகின்றது. இது தமிழ் மொழிக்கும் பொருந்தும்.தமிழில் தொல்காப்பியமும் இதற்கு சான்றுபகர்கின்றனது.உண்மையில் தொல்காப்பியத்திற்கு முன்னரே இந்நிலை சிறப்பாக வளர்ந்திருக்க வேண்டும்.ஆனால் அவை எமக்கு கிடைக்க வில்லை தொல்காப்பியமும் தொல்காப்பியம் செய்யுள் இயலில் நால்வகை உரைபற்றி குறிப்பிடப்படுகின்றது.

பாட்டிடை
வைத்த குறிப்பி னானும்
பாவின் றெழுந்த கிளவி யானும்
பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளாடு புணர்ந்த நகைமொழி யானும்
உரைவகை நடையே நான்கென மொழிப

(தொல்:சொல்:117)

இதிலிருந்து தொல்காப்பியருக்கு முன்னரே தமிழில் உடைநடை பெருகியிருகின்றது தெரிகின்றது. பரிபாடல்,நற்றினை, பதிற்றுப்பத்துஆகியவற்றில் உரைநடைக்கான சாயல்கள் உண்டு.இதன் பின் சங்கமருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரம் இதனை மேலும் வளர்த்திருப்பது போல் தெரிகின்றது.சிலப்பதிகாரத்தில் ‘உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்’எனவருகின்ற பதிகச்செய்யுள் அடியில் உரைநடை பற்றிய செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன.அது மட்டுமன்றி உரைபெறு கட்டுரை,உரைபாட்டுமடை  என்கின்ற பெயர்களோடு இக்காப்பியத்தில் இடைஇடையே உரைநடை கையாளப்படுகின்றது. உதாரணமாக ‘ஒரு பரிசா நோக்கிக்கிடந்த புகார்க்காண்டம் முற்றிற்று’ , ‘பாண்டியன் நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா நோக்கிக்கிடந்த மதுரைக்காண்டம் முற்றிற்று’ முதலிய கவி அடிகள் உரைநடை போலவே காணப்படுகின்றன.கானல் வரி, ஆச்சியர் குரவை, குன்றக்குரவை முதலிய காதைகளிலும் உரைநடைசாயல்களை அவதானிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட இந்நிலமைகளின் பின்னர் தான் உரையாசிரியர்கள் என்கின்ற புதியமரபொன்று இறையனாரின் இறையனார் களவியலுரையோடு தோற்றம் பெறுகின்றது. இந்தத்தோற்றம்  தமிழ் மொழியில் உரைநடை வளர்ச்சிப்போக்கில் ஒரு திருப்புமுனை எனலாம். சிலப்திகாரம் செய்யுளோடு உரைநடையை கைக்கொண்டு புதிய மரபை தோற்றுவிக்க உரையாசிரியர்களோ செய்யுட்களில் எழுதப்பட்ட இலக்கண இலக்கியங்களுக்கு தங்களது காலத்து நிலைமைகளில் இருந்து செய்யுட்களுக்கு வியாக்கியானம் கூறுகின்ற முறை அடிப்படையில் உரையாசிரியர்களின் உரை மரபு காணப்படுகின்றது.

தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் பல்லவர் காலம் தொடக்கம் நாயக்கர் காலம் வரையிலான காலப்பகுதில் பின்வரும் உரையாசிரியர்கள் முக்கியமானவர்கள்.

  • இளம்பூரணர்
  • சேனாவரையர்
  • பரிமேலழகர்
  • பேராசிரியர்
  • அடியார்க்குநல்லார்
  • கச்சினார்க்கினியர்
  • தெய்வச்சிலையார்

மேற்குறிப்பிட்ட உரையாசிரியர்கள் உரைமரபுகளை பழைய உரைநடை எனக்கூறுகின்ற மரபு உண்டு. வீரமாமுனிவரின் பின்னார் தோற்றம் பெற்று வளர்ந்துவந்த உரைநடைகளையே  நவீன உரைநடை எனக்குறிப்பிடுகின்றனர்.

தமிழ் உரைநடை வரலாற்றில் உரையாசிரியர்களின் உரைநடை மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உரையாசிரியர்களின் நடையை புலவர் நடை என்றும்,காலத்துக்கேற்ற நடை என்றும் கற்ற புலமைக்கேற்ற நடை என்றும் கற்பவர் தகுதிக்கேற்ப நடை என்றும் கூறுவர். உரையாசிரியர்கள் இறையனார் உரையாசிரியர்கள்அகப்பொருளுரையை பின்பற்றினார்கள் எனவும் கூறுவர்.இலக்கிய இலக்கணங்களை விளக்கவும் தத்துவக்கொள்கைகளை தற்கரீதியாக விளக்கவும் வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டதால் தமிழ் உரைநடையில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டியதாயிற்று. இன்றைய உரைநடை வளர்ச்சிக்கு உரையாசிரியர்களின் உரைநடை ஓர் அடிப்படைக்காரணமாகும். இவ் உரையாசிரியர்கள் தொல்காப்பியத்திற்கு மட்டுமன்றி பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், சிந்தாமணி போன்ற இலக்கியங்களுக்கும் எழுதியுள்ளனர்.

நா.வானமாமலை அவர்கள் இவ் உரையாசிரியர்களைப்பற்றி குறிப்பிடும் போது,இலக்கிய இலக்கண உரைகளில் நடை ஆசிரியன், மாணவனுக்கு கற்பிக்கும் போக்கிலேயே வாய்மொழிப்போதனையின் செல்வாக்கு மிகுதியும் பெற்று விளக்குகின்றது. ஆசிரியன் ஒரு பொருளை விளக்கும் பொழுது மாணவனுக்கு தோன்றக்கூடிய ஐயங்களை உணர்ந்தது அவற்றைக்கூறி விளக்கமும் கூறும் விதத்தில் இவ்வுரையின் நடைப்போக்கு அமைந்துள்ளது.எனவே இதனை “கற்பிக்கும் முறை உரைநடை எனக் கூறலாம்” ஆகவே உரையாசிரியர்களின் உரைநடை  தமிழ் உரைநடை வரலாற்றில் காலத்தேவைகளை பூர்த்தி செய்கின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.

இலம்பூரணார் சோழர்காலத்தில் வாழ்ந்த நான்கு உரையாசிரியர்களுள் முக்கியமானவர் ‘எளிய சொல்லும் “இனிய ஓசையும்” தெளிந்த கருத்தும் அமையப்பெற்று தெளிந்த நீரோடை போல் இவரது உரைநடை அமைந்துள்ளது”. சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் பண்புடையது. தொல்காப்பியத்துக்கு முதல் முதல் உரை எழுதியவர். இவரே பிறமொழி பயிற்சி இன்றி தமிழிலே மிகச்சிறந்த உரை எழுதியவர்.

சோழர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு முக்கியமான உரையாசிரியர் சேனாவரையர்.. இவர் வடமொழி மரபைத் தழுவி உரைகளை எழுதியுள்ளார். செறிவும், திட்டமும் வாய்ந்ததோடு தற்கமுறையிலும் அமைந்ததாகும். சேனாவரையரின் உரைநடை தாக்கத்தை சிவஞானசுவாமிகளின் மாபாடியத்தில் காணலாம்.புலமைப்பெருமிதமும், ஆராட்சி வன்மையும் காணப்படுகின்றது. சேனாவரையரது உரைநடை அறிவுச்செறிவும் தற்கநியாய சாஸ்திரங்களின் நுண்மையும் கொண்டது. சொல்லுக்கு சேனாவரையம் என்றே கூறுகின்ற மரபு உண்டு.

பேராசிரியர் அவர்கள் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியதாகக்கூறுவர்.அத்துடன் மாணிக்கவாசகரின் திருக்கோவையாருக்கு உரை எழுதயுள்ளார்.பேராசிரியர் செல்வநாயகம் அவர்கள் தனது உரைநடை வரலாறு என்ற நூலில் இவரைப் பற்றி கூறும் போது, இளம்பூரணாரை ஒட்டிய உரைநடையே இவரிடத்தில் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. இவரது உரைநடை இலக்கணத்தன்மை கொண்டது. ஆயினும்செப்பமும் தெளிவும், எளிமையும் கொண்டது.

தெய்வச்சிலையார் சோழர்காலத்தவர் என குறிப்பிடப்பட்டாலும் முன்னர் கூறிய மூன்று பேருடைய வியாக்கியானங்களை மருத்துக்கூறுகின்ற இயல்பு காணப்படுகின்றது. எனவே இவர் காலத்தால் பிந்தியவர் என குறிப்பிடப்படுகின்றது. வடமொழி, தமிழாகிய இருமொழிகளிலும் பாண்டித்தியம் உடையவர். சிந்தனைத்தெளிவு இவருடைய உரைநடையில் காணப்படுகின்றது.பொருள் இயைபு கருதி சூத்திர வைப்பு முறைகளை மாற்றியமைத்தவர் குறியீட்டுப் பிரயோகங்களையும் கையாளுகின்ற இயல்பு இவரிடம் காணப்படுகின்றது.

எனவே உரையாசிரியர் காலத்திலேயே சிறந்த ஒரு உரைநடை வளர்ச்சி பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.பழந்தமிழ் இலக்காண இலக்கியங்களை புரிந்துகொள்ளவும் தமிழ் உரைநடை வரலாற்றுக்கு மட்டுமன்றி இலக்கிய வரலாற்று வளர்ச்சிக்கும் இது உந்துசக்தியாக அமைந்துள்ளது.எனவே உரையாசிரியர்களின் உரைநடை மரபு பழைய மரபாக காணப்பட்டாலும் அக்காலத்தில் அதன் தேவை முக்கியமானதும் அவசியமானதுமாகும்.

B.A TAMIL NOTES

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks