தமிழ் மொழி வரலாற்று காலகட்டங்கள்

தமிழ் மொழி வரலாற்று காலகட்டங்கள்.

கி.பி 1ம் நூற்றாண்டு தொடக்கம் தமிழ் மொழியானது தனித்துவமான இலக்கிய வளத்தைப் பெறுகின்ற அதே நேரம் மொழி சிந்தணைகளை வளர்க்கும் நோக்குடன் தமிழ் மொழிக்கான இலக்கணத்தையும் உருவாக்கியது . இந்த இலக்கண உருவாக்கம் மொழி பற்றிய சிந்தனைகளை விரிவுபடுத்த உதவிற்று.

ஒரு மொழியில் காலத்திற்கு காலம் மாற்றங்கள் ஏற்படுவதற்கு அகப்புறக்காரணிகள் பல தூண்டுகோளாக அமைகின்றன.

 1. அரசியற்தொடர்பு
 2. சமயத் தொடர்பு
 3. அயல் நாடுகள் மற்றும் எனைய நாடுகளுடனும் கொண்டிருந்த தொடர்பு
 4. வியாபாரத் தொடர்பு
 5. ஒரு மொழி பேசுகின்ற சமூகம் அகநிலையில் தங்களுக்குள் ஏற்படுத்துகின்ற மாற்றம்.
 6. புதிய கண்டுபிடிப்புக்களும்,தொழில்நூட்ப முன்னேற்றங்கள்
 7. பல்லினச் சமூகங்களிடையே காணப்படும் ஒருங்கிணைப்பு போன்ற பல்வேறு காரணங்கள் ஒரு மொழி வரலாற்றில் தவிர்க்க முடியாதவாறு மாற்றங்களை ஏற்படுத்தும். மொழி மாற்றம் என்பது வெறுமனே சொல்லில் ஏற்படுகின்ற மாற்றம் மாத்திரமல்ல மாறாக,
  1. சொற் பொருள் மாற்றம்
  2. வரிவடிவ மாற்றம் (எழுத்துச்சீர்திருத்தம்)
  3. எழுத்துக்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றம் (முதல்,இடை,கடை)
  4. சொற்றொடர்களில் ஏற்படுகின்ற மாற்றம் ஆகியன ஒட்டுமொத்தமாக மொழியில் காலந்தோறும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

உலகின் எல்லா மொழிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது இயல்பு அவ்வாறு மாற்றங்களை உள்வாங்காத அல்லது மாற்றங்களுக்கு உட்படாத மொழியை வாழுகின்ற மொழியாக கருத முடியாது. இவ்வடிப்படையில் தமிழ் மொழியில் வரலாற்றை தொல்திராவிட மொழியில் இருந்து ஆரம்பிப்பர். எவ்வாறாயினும் ஒரு நாட்டின் வரலாற்றில் கல்வெட்டுக்கள் முக்கியத்துவம் பெறுவது போல ஒரு மொழியின் வரலாற்றிலும் கல்வெட்டுக்கள் முக்கியம் பெறுகின்றன. இதனாலேயே தமிழ் மொழி வரலாற்றை ஆராய்கின்றவர்கள் 03 பெரும் பிரிவுகளாக வகுத்து நோக்குவர்.

01) பழங்கால தமிழ்

 • தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுக்களின் மொழி
 • தொல்காப்பியத்தமிழ் மொழி
 • சங்ககாலத்தமிழ்மொழி
 • சங்கமருவிய காலத்தமிழ்மொழி

2.  இடைக்காலத்தமிழ் (மத்தமத்தியகாலத்தமிழ்)

 •  பல்லவர்காலத்தமிழ்
 •  சோழர்காலத்தமிழ்
 • நாயக்கர் காலத்தமிழ்

3.  தற்காலத்தமிழ்

 •  19ம் நூற்றாண்டுத்தமிழ் (உரைநடைக்காலம்)
 • 20ம் நூற்றாண்டு (கவிதை, நாவல், சிறுகதை)

தமிழ்ப்பிராமிக்கல்வெட்டுக்களின் மொழி கி.மு 3ம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் ஆட்சி செய்த பொழுது தென்னிந்தியாவிலும் ஈழத்திலும் பௌத்தமதம் பரவிற்று இதணைத் தொடர்ந்து சமணமும் முக்கியப்படுத்தப்பட்டது. அக்காலத்தில் இருந்தே  பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுக்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இக்கல்வெட்டுக்களுள் மிகப்பழமையானவை பிராமிக்கல்வெட்டுக்களாகும். கீழவளைவு, மறுகால்தலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, சித்தன்னவாசல், திருவாதவூர், திருப்பரங்குன்றம், மாங்குளம், கருங்காலங்குடி, புகளூர், அரசனூர், மாமன்டூர் போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களாக உள்ளன.

தமிழ் நாட்டில் உள்ள மிகப்பழமையான குகைக்கல்வெட்டுக்கள் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இலங்கையிலும் இத்தகைய பிராமி எழுத்து கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிராமி எழுத்து வடிவமே இந்திய வரிவடிவங்களின் தாய் எனக்கருதப்படுகின்றது. இது வடபிராமி, தென்பிராமி என இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது. தென் பிராமி என்ற வரிவடிவமே ‘திராவிடி’ என அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டு  பிராமி எழுத்துக்களில் தமிழுக்கே தனிச்சிறப்பாக உள்ள ழகரம், றகரம், னகரம் எனும் எழுத்துக்களும் காணப்படுகின்றது. இத்தகைய கல்வெட்டுக்கள் பற்றிய ஆய்வுகள் கே.வி சுப்பிரமணி ஐயர், சி.நாராயண ராவ், ஐராவதம், மாகாதேவன், மயிலை சீனி வேங்கடசாமி முதலியோர் ஆராய்ந்து இக்கல்வெட்டுக்களின் பெரும்பாலானவை தமிழோடு தொடர்புபட்டவையாக குறிப்பிட்டுள்ளனர்.

தொல்காப்பியத்தமிழ்

தமிழில் காணப்படும் மிகப்பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இந் நூல் தோன்றுவதற்கு முன்னர் ஒரு செம்மையான இலக்கியப்பாரம்பரியமும், மொழிப்பாரம்பரியமும் காணப்பட்டிருத்தல் வேண்டுமென்பது உண்மையாகும். தென் பிராமிக்குப் பிறகு திராவிட மொழிகளுள் மிகப் பழமையான நூலாக தொல்காப்பியம் கருதப்படுகின்றது.
தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் தொடர்பாக பல சர்ச்சைகள் இன்று வரையில் காணப்படுகின்றது. எதுவாயினும் கி.மு 1ம் நூற்றாண்டுக்கும் கி.பி 3ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே ஆக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்பது தெளிவாக தெரிகிறது. தொல்காப்பியம் ஐந்திலக்கண மரபு பற்றி சிறப்பாக எடுத்துக்கூறுகின்றது. எழுத்து தோன்றுவதற்கு காரணம் உச்சரிப்பு முறையியல் என்பதனையும் உச்சரிப்புக்குரிய உறுப்புக்கள் பற்றியும் ஒரு விஞ்ஞான சிந்தனையை தொல்காப்பியம் முதல்முதலில் முன்வைக்கின்றது. அது போலவே வட மொழி இலக்கணங்களின் பல்வேறு கூறுகளும் தொல்காப்பியத்தில் பேசப்பட்டிருக்கின்றது.
பொருளதிகாரம் என்ற பகுதியில்  தொல்காப்பியர் தான் வாழ்ந்த காலத்து மக்கள் சமுதாயத்து நிலைமைகளையும் இலக்கியம் ஆக்கப்படுவதற்குரிய கூறுகளையும் கவிதைக்கொள்கை பற்றியும்  சிறப்பாக கூறுகின்றது. அகத்திணையியல் , புறத்திணையியல், களவியல், கற்பியல்,செய்யுளியல் ஆகியவை இன்று வரையில் முக்கியத்துவம் உடையதாக கருதப்படுகிறது. தற்கால மொழியியளாளர்களும் வியக்கும் வண்ணம் பல்வேறு இலக்கியகொள்கைகள் தொல்காப்பியத்தில் காணக்கிடைக்கின்றது. எனவே தமிழ் மொழி வரலாறு தொல்காப்பியத்தில் இருந்து தொடங்குகிறது எனலாம்.

சங்க காலத்தமிழ் 

சங்க இலக்கியம் என்று குறிப்பாக கூறப்படுபவை எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களாகும். மொழி வரலாற்றிலே இக்காலத்தை ‘பழந்தமிழ்க்காலம்’ எனக்குறிப்பிடுவர். மேற்குறிப்பிட்ட பதிணெண்மேற் கணக்கு நூல்களில் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய 03 நூல்களும் ஏனைய பதினைந்து நூல்களுடன் ஒப்பிடும் பொழுது மொழி நிலையில் வேறுபட்டிருப்பதை அவதானிக்கலாம். எஸ்.வையாபுரிப்பிள்ளை முதல் எஸ். அகத்தியலிங்கம் வரையில் யாவரும் இக் கூற்றை ஏற்றுக்கொள்கின்றனர்.

தொல்காப்பியத்தில் காணப்படுகின்ற சில கூறுகள் சங்க காலத்தமிழிலும் காணப்படுகின்றது. சில மாற்றங்களைத்தவிர சங்ககாலத்தமிழ் முழுவதும் தொல்காப்பியத்தமிழே ஆகும். தொல்காப்பியம் குறிப்பிடும் பதினொரு உயிரெழுத்துக்களும் சங்கத்தமிழ் மொழிக்கு இறுதியில் வருகின்றன. அதுபோல் புணர்ச்சி விதிகளும், பதிலிடு பெயர்களும், காலம் பற்றிய பெயர்களும்,மூவிடப் பெயர்களும் கூட்டுவாக்கிய அமைப்புக்களிலும் தொல்காப்பியம் கூறுகின்ற இலக்கணக் கூறுகள் இயைந்து வருவதை அவதானிக்கலாம். எனவே சங்கத்தமிழ் தொல்காப்பியத்தமிழை பெரும்பான்மை ஒத்தும் சிறுபான்மை வேறுபட்டும் செல்வதைக் காணலாம். வேறுபடுதல் என்பது மொழி வளர்ச்சியைக் காட்டுவதாகும்.

சங்கமருவியகாலத்தமிழ்

மொழி அறிஞர்கள் பலர் சங்ககாலத்தமிழை முன் பழங்கால தமிழ் எனவும் சங்கமருவிய காலத் தமிழை பின் பழங்காலதமிழ் எனவும் குறிப்பிடுகின்றனர். அதிலும் சிலப்சிலப்பதிகாரம் மணிமேகலை போன்றவற்றின் மொழிநடை முற்றாக வேறுபட்டிருப்பதை அவதானிக்கலாம். ஆனால் சங்கத்தமிழையும் சங்கமருவிய காலத்தமிழையும் ஒரே கலவையாக பார்போமாயின் சங்கமருவியகாலத்தமிழ் சில புதிய கூறுகளைக் கொண்டிருக்கின்றதே தவிர முற்றுமுழுதாக மாறிய தொன்றல்ல திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றிலே அதிகமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக யகரமெய்கெடல் உதாரணம்?, யார்-ஆர்,  யானை-ஆனை, சகரம் முதல் மொழிச் சொற்களாக சிலப்பதிகாரத்திலும்,மணிமேகலையிலும் சகரம் மொழிமுதலாய் வந்துள்ள சொற்கள் அதிகமாயுள்ளன. உதாரணம் சகடு, சண்பகம்,சதுக்கம்,சம்பாபதி எனவே சங்கமருவிய காலத்தமிழ் சங்ககாலத்தமிழில் இருந்து வேறுபட்டிருப்பதை அவதானிக்கலாம்.

இடைக்காலத்தமிழ்

மொழி வரலாற்று ஆய்வாளர்கள் பல்லவர் காலம், சோழர்காலம்,நாயக்கர் காலம் ஆகிய காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட மொழியின் இயல்பைக் கொண்டு வரலாற்று ஆய்வுத்தேவைக்காக ‘ இடைக்காலத் தமிழ்’ என்பர். பல்வர் காலத் தமிழை இலக்கியத் தமிழ் என்றும், சோழர்காலத்தமிழை காவியத்தமிழ் என்றும் நாயக்கர் காலத் தமிழை வித்துவத்தமிழ் என்றும் குறிப்பிடுகின்ற மரபு உண்டு. எவ்வாறாயினும் மொழிநிலையில் சிந்திக்கின்ற போது பல்வேறு மாற்றங்களை இங்கு காணமுடிகின்றது.

பல்வர் காலத் தமிழை அறிந்து கொள்வதற்கு தேவாரங்களையும் நாலாயிரம் திவ்யபிரபந்தங்களையும், சில கல்வெட்டுக்களையும்ஆதாரமாகக்  கொண்டு அறியலாம்.  இக் காலத்தில் பல புதிய சொற்கள் பல புதிய அர்த்தங்களைப்பெறுகின்றன. பல்வர் காலத் தமிழில் ‘கள்’ விகுதி பதிலிடு பெயர்களில் வருவதை அவதானிக்கலாம். அப்பரது தேவாரத்தில் நீர்கள் என்று வருகிறது.  நன்கள் என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இடைக்காலத்தமிழில் எதிர்கால இடைநிலைகளுடன் ஆய் விகுதி இணைந்து ஏவல்விணை உருவாகியுள்ளது.தருவாய் = தரு+வ்+ஆய், அஞ்சேல் போன்ற மாற்றங்களைக் காணமுடிகின்றது.

பழந்தமிழுக்கும், இடைக்காலத்தமிழுக்கும் இடையே சோழர்காலத்திலேயே பெருமாற்றங்கள் ஏற்படுகின்றன.

கம்பராமாயணம், சிவகசிந்தாமணி போன்ற வளமான இலக்கியங்களும் வீரசோழியம், நேமிநாதம்,  நன்னூல் போன்ற மொழிமாற்றங்களை எடுத்துக்கூறுகின்றன. இலக்கண நூல்களும் இக்காலத்தில் தோன்றின. அத்துடன் சோழர்காலக்கால்வெட்டுக்களும் மொழியின் வரலாற்றை அறிவதற்கு உதவியாக இருக்கின்றன. குறிப்பாக எழுத்துக்களின் நிலைகள்
சார்பெழுத்துக்கள், பதவியல் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் எடுத்துக்காட்டப்படுள்ளன. உச்சரிப்பு முறையிலும் இம்மாற்றங்களை காணமுடிகின்றது. குறிப்பாக சோழர்காலத்தமிழில் வடமொழிச் சொற்களின் அதிகரிப்பு காரணமாக மணிப்பிரவாளநடை என்று சொல்லுமளவிற்கு மொழி மாற்றத்திற்குள்ளாகியுள்ளது. அதுமட்டுமன்றி உரையாசிரியர்களின் வரவும் அவர்களின் வியாக்கியான உரைநூல்களும் மொழிமாற்றத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.

நாயக்கர் காலத்தமிழ் இடைக்காலக்காலத் தமிழின் கடைசிக் கூறாகவும், தற்காலத்தமிழின் ஆரம்பமாகவும் கருத முடியும். இடைக்காலத்தமிழின் ஆரம்பமாகவும் கருத முடியும். இடைக்காலத்தமிழின் பல்லவர் சோழர்காலங்களில் வளமான இலக்கியங்கள் தோன்றியது போல நாயக்கர் காலத்தில் தோன்றவில்லை . இக்காலத்தில் சமஸ்கிரதத்தின் அதிகரித்த செல்வாக்கும் அதன் காரணமாக சமஸ்கிரதச் சொற்கள் தமிழாகும் நிலையும் இங்கு ஏற்டுகின்றது.
உதாரணம், ரிஷி – ரிசி
தோஸா – தோசம்

நாயக்கர் காலத்தில் உரையாசிரியர்களின் அதிகரிப்பு காரணமாக பல்வேறு உரைகள் எழுதப்படுகின்றன. குறிப்பாக நாலாயிரந்திவ்யபிரபந்தம், தேவாரத்திருவாசகங்களுக்கு மணிப்பிரவாள நடையில் உரைகள் வகுக்கப்பட்டன. இவற்றினூடாகவும் தமிழ் மொழியில் மாற்றங்கள் ஏற்பட்டன.
எனவே இடைக்காத்தமிழ் என்கின்ற போது பல்லவர்,சோழர்,நாயக்கர் காலத்தமிழ் மொழியினையும் அவை பழங்காலத்தமிழில் இருந்து மாறுபட்டு நிற்கும் நிலையினையும் நோக்க முடியும்.

தற்காலத்தமிழ்

மேலைநாட்டாரின் வருகைக்கு பின்னர் தமிழ் மொழி வரலாற்றில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டதெனலாம். தற்காலத்தமிழின் பெருமாற்றத்திற்கு ஆங்கிலமொழியின் செல்வாக்கும், அச்சியந்திரத்தின் வருகையும் மிகமுக்கியமாவையாகும். மேனாட்டார் தொடர்பால் சிறுகதை, நாவல்,உரைநடை , பத்திரிக்கை போன்ற பல்வேறு துறைகளில்தமிழ் மொழியும் நவீன மொழியாக வளரத்தொடங்கியது. பெஸ்கி, ரேனி யஸ், கிரால், கால்டுவெல் ஆகியோர் 19ஆம் நூற்றாண்டுத்தமிழைப்பற்றி குறிப்பாக பேச்சுத்தமிழைப்பற்றியும் ஆராய்ந்துள்ளார். கோல்டுவெல் அவர்களை திராவிட மொழியியலின் தந்தை எனக்குறிப்பிடுகின்றனர்.

மேலைநாட்டாரின் வருகையினால் தமிழ் உரைநடைவளர்ச்சி பெற்றது. கலை, இலக்கியம், இலக்கணம், அறிவியல் போன்ற துறைகள் வளர்ச்சியடைய தமிழ் மொழியும் பல்வேறு மாற்றங்களைக்கண்டது. புதிய கலைசொற்கள், புதிய இலக்கணக்கூறுகள், புதிய வாக்கிய அமைப்புக்கள் போன்ற பலநிலைகளில் தமிழ் மொழியில் மாற்றங்கள் ஏற்பட்டன.

20ம் நூற்றாண்டு தமிழ் பற்றி ஆராய்கின்ற போது வானொலித்தமிழ், பத்திரிகைத்தமிழ், திரைப்படத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல்தமிழ் என தமிழ்மொழி விரிவடைந்து செல்கின்றது. 20ம் நூற்றாண்டுத்தமிழைப்பற்றி எஸ்.வையாபுரிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுத்தரனார், ச.அகத்தியலிங்கம் , செ.வை.சண்முகம் , சு.சக்திவேல் ஆதிரனோவ் , கமில்சுவலபில் (KAMILZVSELABIL), எம்.எ.நுஃமான் போன்றோர் சிறப்பாக தமிழ்மொழியின் துரிதமாற்றங்களை ஆராய்துள்ளனர்.

20ம் நூற்றாண்டுத் தமிழில் பேச்சுத்தமிழுக்கும் எழுத்துத்தமிழுக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. அத்துடன் பிரதேசமொழிகளில் வேறுபாடுகள் காரணமாகவும் தமிழ்மொழி பேசுகின்ற மக்கள் உலகெங்கும் குடியேறிவருவதன் காரணமாகவும் அந்தஅந்த நாடுகளில் பேசப்படும் மொழிப்போக்குகளுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கணநூல்கள் கூறுகின்ற வரையறைகளிலும் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன. (முதனிலை, இடைநிலை, இறுதிநிலை) பத்திரிகைத்தமிழ் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அறிவிப்பு நடையில் தமிழ் அவதானிக்கப்படுகின்றது. மொழியினை புதிய துறையில் பயன்படுத்தும்போது, தவிர்க்க முடியாதவாறு அதநோடுசம்பந்தப்பட்ட புதுச்சொற்கள் மொழியில் வந்தது சேர்ந்துவிடுகின்றது.

எனவே ஒரு சமூகத்தில் வாழுகின்ற ஒரு மொழி அதன் காலச்சுழல், சமுதாயமாற்றம், அறிவியல் மாற்றம், உலகமயமாதல் ஆகியவற்றின் மாற்றங்களை உள்வாங்குகின்ற போது புதிய சொற்கள் ஆக்கப்படுவதோடு மொழி உத்வேகம் அடைகின்றது. இத்தகைய அடிப்படையிலேயே மொழிவரலாற்று ஆசிரியர்கள் ஒரு மொழியினை பல்வேறு காலகட்டங்களாக பிரித்து நோக்கியுள்ளனர்.

B.A Tamil Notes

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks