விசிட்டாத்வைதம் / இராமானுஜர் வேதாந்தம்

விசிட்டாத்வைதம் / இராமானுஜர் வேதாந்தம்

பிரம்ம சூத்திரத்திற்கு இராமானுஜர் எழுதிய விளக்க உரையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது விசிட்டாத்வைத வேதாந்தமாகும். சங்கரர் தத்துவத்தில் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டி அவற்றை மறுக்கும் முகமாகவே இராமானுஜர் தனது தத்துவத்தை விளக்குகின்றார். சங்கரர் முன்வைக்கும் மாயா வாதம் விளக்கப்பட முடியாத ஒன்றென இராமானுஜர் குறிப்பிடுகிறார். உள்ள பொருள் என்பதற்கு நிலையாக இருப்பது என்ற தவறான கருத்தை சங்கரர் கொண்டதாலேயே தேவை அற்ற இந்த மாயா வாதம் சொல்லப்படவேண்டியாயிற்று எனக் கூறி சங்கரரில் இருந்து வேறுபட்ட வரைவிலக்கணத்தை உள்பொருளுக்கு காட்டுகிறார். நிலையான அழிவற்ற இயக்க கூடிய பொருள் எதுவோ அதுவே உள் பொருள் ஆகும் என சுதந்திரமாக இயக்குதல் என்ற பண்பினை முக்கியப்படுத்தி உண்மைப் பொருளை விளக்குகிறார். கடவுள், உயிர், உலகம் என்ற முன்றினையும் “இருக்கின்றவை” எனக் கொள்ளும் இராமானுஜர் அம் மூன்றினுள் சுதந்திரமாக இயங்க கூடியது ஒன்றுதான் எனக் காட்டி உள்பொருள் இரண்டல்ல எனும் தனது விசிட்டாத்வைத கோட்பாட்டை விளக்குகின்றார்.:

உயிரானது உடலில் எவ்வாறு தங்கியிருகிறது. அவ்வாறு கடவுளானவர் உயிர் உலகங்களில் தங்கி நிற்கிறார். என்றும் உடலை நோக்க உயிரே  சுதந்திரமுடையது. உயிர் உலகங்களை நோக்க இறைவனே சுதந்திரமுடைவர். எனக் காட்டி உள் பொருள் இரண்டல்ல என நிறுவுகிறார்.

இராமானுஜர் அங்கம் அங்கி என்ற தொடர்பின் அடிப்படையில் உயிர் உலகங்களை அங்கங்களாகக் கொண்டே அங்கியாக இறைவன் அமைகிறான் என்றும் இவற்றுள் அங்கியே சுதந்திரமாக இயங்கக்கூடியது என்றும் கூறுகிறார். உயிரும் உலகும் பிரம்மத்திக்கு விசேடணம். விசேடணம் என்பது அங்கம் அங்கி என்பது விசேடியம் எனப்படுகிறது. விசேடண விசேடியங்களை உள்ளடக்கிய இராமானுஜரது அத்வைதம் விசிட்டாத்வைதம் எனப்படுகிறது.

இறைவன், உயிர், உலகங்களுக்கிடையிலான தொடர்பு எத்தகையதென விளக்குகின்ற போது உலகில் உள்ள பேதங்களை மூன்று வகையாக இராமானுஜர் பிரித்து காட்டுகிறார். ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளுக்கு வித்தியாசம் என்ற “விஜாதீய பேதம்” ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு பொருள்களுகிடையிலான வித்தியாசம் என்ற “சஜாதீய பேதம்” ஒரு பொருளுக்கு அதன் பகுதிகளுகிடைலான வித்தியாசம் என்ற “சுவகத பேதம்” என்பனவே அவ் முவகை பேதங்களாகும் இதனை முறையே ஒரு மரத்திற்கும் செடிக்குமான வித்தியாசம், ஒரு மரத்திற்கும் இன்னொரு மரத்துக்கும் இடையிலான வித்தியாசம், ஒரு மரத்துக்கும் அதனது வேர், கிளை என்பவற்றின் வித்தியாசம் என்பதன் மூலம் காட்டலாம். இவற்றுக்கு மூன்றாவது வகையான “சுவகத பேதத்தை” இறைவன், உயிர்,உலகங்களுக்கு காட்டி அதன் மூலம் ஒரு முழுபொருளுக்கு அதன் பகுதிகளுக்குமிடையிலான வித்தியாசம் போன்ற பிரிக்கப்பட முடியாத தொடர்பே இவைகளுக்குகிடையில் உண்டு என இராமானுஜர் விளக்குகிறார்.

அப்ரதக் சித்தி

இந்த உலகு இறைவன் உயிர்களாகிய மூன்றுக்கும் இடையிலான தொடர்பை அப்பிரதக்சித்தி மூலம் இராமானுஜர் விளக்குகிறார். பிரம்மமாகிய இப் பொருளுக்கு உயிர்களும் உலகும் அங்கங்கள் இறைவன் அங்கி அதாவது அங்கங்களை உடைவன். இந்த அங்கங்களுக்கும் அங்கிக்கும் இடையிலான தொடர்பு பிரிக்க முடியாதது. ஒன்று நிலைப்பதற்கு இன்னொண்று அவசியம் என்பதாகும். அதாவது  ஒரு கத்தியில் இருந்து பிடியைப் பிரிக்கலாம். ஆனால் பழத்தில் இருந்து சுவையைப் பிரிக்க முடியாது என்கிறார். அதுமட்டுமின்றி பழம் இருந்தால்தான் சுவை இருக்கும் எனவே சுவை நிலைப்பதற்கு பழம் இன்றியமையாதது. அதுபோலவே உயிர்களும் உலகும் நிலைப்பதற்கு இறைவன் இன்றியமையாதது என்கிறார் இராமானுஜர்.

இராமானுஜர் ஆன்மாக்கள் பற்றிக் கூறுமிடத்து ஆன்மாக்கள் உள்பொருள் என்றும் அவை எண்ணற்றவை என்றும் கூறுகிறார். ஆன்மாக்களை மூன்று வகையாக பிரித்து காட்டுகிறார்.

  • என்றும் முத்தி நிலையில் இருக்கின்றவைகள்.
  • பெத்த நிலையிலிருந்து முத்தி நிலைக்கு வந்தவர்கள்.
  • பெத்த நிலையில் உள்ளவை என்பதே அவையாகும்.

பெத்த நிலை என்பது மலபிடிப்புள்ள நிலை ஆகும்.

வீடுபேறு / முத்தி

ஆன்மாக்கள் கன்மம், மறுபிறவி எனும் துன்பங்களை அனுபவிக்கின்றன என்பதை இராமானுஜர் ஏற்றுக் கொள்கிறார். இவ் ஆன்மாக்கள் தமது துன்பங்களில் இருந்து விடுபட்டு ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் நாராயனனது பாதார விந்தங்களில் சேர்வதே முத்தியாகும் என இராமானுஜர் கூறுகிறார்.

துன்பங்களில் இருந்து விடுபட கன்மம், பக்தி, ஞானம் என்ற மூன்று வழிகளையும் குறிப்பிடுகிறார். இவற்றோடு பிரபக்தி என்ற ஒன்றினையும் குறிப்பிடுகின்றார். இறைவனிடம் அன்பு செலுத்துதல் பக்தி என்பது போல் இறைவனுக்குத் தன்னை சரனாகதியாக கொடுத்தல் பிரபக்தியாகும். இது உயர்ந்த நிலையாகும். இதன் மூலம் விரைவில் முத்தி பெறலாம் என்பது இவர் கருத்தாகும்.

பிரபக்தி

இதில் விதிக்கப்பட்ட கடமைகள் அனைத்தையும் பலனை எதிர்பாராது செய்தல் வேண்டும்.அத்துடன் இறைவனை இடையறாது தியானித்தல் வேண்டும். இது துருவஸ்மித்தி எனப்படும். இது கைவரப் பெறின் கடவுள் காட்சி கைகூடும் இதுவே வீடு பேற்றிற்கு வழியாகும்.

தர்மபூத ஞானம்

இஞ் ஞானம் இறைவனுக்குமுண்டு ஆன்மாக்களுக்கும் உண்டு இறைவனது ஞானம் பரிபூரணமானது. ஆன்மாக்களுடைய ஞானம் குறைபாடுடையது. இறைவனது ஞானம் தொழிற்பட துணை ஏதும் தேவையில்லை ஆன்மாவின் ஞானத்திற்கு அந்த காரணங்களின் துணை வேண்டும். இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு ஆகியவை யாவும் இந்த தர்மபூத ஞானத்தின் வெவ்வேறு வடிவமாகும்.

இராமானுஜர் வேதாந்தமும் சைவசித்தாந்தமும்                

சைவ சித்தாந்தத்துடன் அடிப்படையில் வேறுபடும் இராமானுஜர் சில விடயங்களில் ஒத்துப் போகின்றார். சைவசித்தாந்தம் கூறுவது போல மூன்று 3 பொருட்களும் உண்டு எனக் கூறுகிறார்.

மேலும் இறைவனுடன் ஆன்மா சேருகிறது என்ற கருத்துகளையும் ஆன்மாக்கள் கன்மம் போன்ற துன்பங்களை அனுபவிக்கின்றது என்ற கருத்தில் சைவசித்தாந்தத்துடன் இராமானுஜர் ஒத்துப் போகிறார்.

இவ்வாறு வேதாந்த அடிப்படைகளையும் சைவசித்தாந்த கருத்துகளையும் கொண்டு இராமானுஜர் வேதாந்தம் காணப்படுவதால் வேதந்தத்திற்கும் சைவசித்தாந்தத்திற்கும் பாலமமைத்தவர் என போற்றப்படுகிறார்.

Check Also

2020 AL Chemistry Past Paper and Marking Scheme

2020 AL Chemistry Marking Scheme Tamil Medium

2020 AL Chemistry Past Paper & Marking Scheme Tamil Medium Download 2020 AL Chemistry Past …

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks