இலங்கையில் இந்து நாகரிகம்
இலங்கை பாரத நாட்டுக்கு மிக அண்மையில் அமைந்துள்ளதால் இங்குள்ள மக்கள் பாரத நாட்டிலிருந்து வந்து குடியேறியமையாலும், அங்குள்ள மக்களுடன் சமூக கலாச்சார, சமய, வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தமையாலும் பாரத நாட்டின் சமய, கலாச்சார பரவல் ஈழத்தின் பண்டு தொட்டே நிகழ்ந்து வந்துள்ளமை இயல்பேயாகும். அந்த வகையில் இந்திய நாட்டின் இந்து நாகரிகச் செல்வாக்கும், இந்து சமயத்தின் தாக்கமும் இலங்கையில் தொன்று தொட்டே நிலவி வருகின்றது.
வரலாற்றுக்கு முன்பிருந்தே இந்து சமயம் இலங்கையிலே பரவி இருந்தது இன்று வரை சிறப்புடன் வாழ்வது குறிப்பிடத்தக்கது. இராமயாணம் எனும் இதிகாசத்திலே இலங்கையும் அதன் அரசனான இராவணன் பற்றிய செய்திகளும் முதன்மை பெறுவதை காணலாம். இராவணன் சிவ பக்தன் என்பதும் அவனுடைய பட்டத்து ராணியாகிய மண்டோதரி சிவ வழிபாடுடையவள் என்பதும் இராமாயணத்தின் மூலம் அறியப்படும் விடயமாகும் இவ் இருவர் பற்றிய செய்திகள் சம்மந்தர், அப்பர், மணிவாசகர் முதலியவர்களால் விதந்து கூறப்பட்டுள்ளன. இலங்கையின் பூர்வீக குடிகளான இயக்கர், நாகர் எனப் படுவோர் சிவ வழிபாடுடையவர்களாக இருந்தமை இங்கு நோக்கத்தக்கது. இராவணன் இயக்க வம்சத்தை சேர்ந்தவன் இவர்களது வழிபாட்டிடமாக திருகோணேச்சரம் விளங்கியது. இலங்கையில் முதல் சிங்கள அரசனான விஜயனின் மனைவி குவேனி என்பவளும் இயக்க வம்சத்தை சேர்ந்தவளாவள் என மகாவம்சம் கூறுகின்றது. யாழ்ப்பாண வைபவ மாலை எனும் வரலாற்று நுலில் விஜயன் இந்து மதத்தவன் எனும் செய்தி காணப்படுகின்றது. இராவணனின் மனைவியாகிய மண்டோதரி அவளது தந்தையாகிய மயன் போன்றோர் நாகவம்சத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது வழிபாட்டிடமாக திருக்கேதீச்சரம் விளங்கியது. எனினும் இதிகாசக் கதைகளையும் செவிவழிக்கதைகளையும் சான்றுகளாகக் கொள்வது ஓரளவுக்கே நம்பகரமானது. தொல்லியல் சான்றுகளான கல்வெட்டுகள், நாணயங்கள், கட்டடச் சிதைவுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே வரலாற்றுண்மைகள் நிறுவப்பட வேண்டும். துரதிஸ்டவசமாக பண்டைய ஈழத்தில் இந்து மதம் பெற்றிருந்த முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கு இந்தியாவில் கிடைப்பது போன்ற விரிவான சான்றுகள் இங்கு கிடைக்கவில்லை. இதற்குக்காரணம் கிறிஸ்து சாகாப்தற்திற்கு முன்பே பௌத்தம் இங்கு காலுன்றும் அரசமதமாக விளங்கியதேயாகும். பௌத்தத்தைப் போலவே இந்து மதம் அரசமதமாக விளங்கா விட்டாலும் அது மக்கள் மத்தியில் பேணப்பட்டது தெளிவாகிறது.
அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நுணுக்க ஆய்வுகள் மூலம் இலங்கையில் இந்து மதம் பற்றிய வரலாற்றுண்மைகள் பலவும் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் இவ் வரலாற்றினை பின்வரும் காலகட்டங்களாக பிரித்து நோக்கலாம்.
- வரலாற்றுக்கு முற்பட்ட காலம் கி.மு 2000 – கி.மு 600
- அநூராதபுரக் காலம் கி.மு 600 – கி.பி 1000
- பொலனறுவைக் காலம் கி.பி 1000 – கி.பி 1250
- இடைக் காலம் கி.பி 1250 – கி.பி 1505
- ஐரோப்பியர் காலம் கி.பி. 1505 – கி.பி 1948
- தற்காலம் கி.பி 1949 – இன்று வரை
19 ம் நூற்றாண்டில் இலங்கையில் இந்து நாகரிகம்
இலங்கையை போர்த்துகீசர் கி.பி 1505 தொடக்கம் 1658 வரையும் ஆட்சி செய்தனர். ஒல்லாந்தர் கி.பி 1658 தொடக்கம் 1796 வரை ஆட்சி செய்தனர். இதன் பின் வந்த ஆங்கிலேயர் கி.பி 1796 தொடக்கம் கி.பி 1948 வரை ஆட்சி செய்தனர். இவர்கள் அனைவரும் இலங்கையின் சுதேச மதங்களான இந்து மதத்தையும், பெளத்த மதத்தையும் சீரளிப்பதிலும், தமது மதமான கிறிஸ்தவத்தைப் பரப்புவதிலும் முன் நின்று செயற்பட்டனர். ஒருவர் பின் ஒருவராக போர்த்துகீசர், ஒல்லாந்தர் ஆகிய அன்னியர்கள் 16ம், 17ம், 18ம் நூற்றாண்டுகளில் எமது தேசிய வாழ்வையும், கலாச்சாரத்தையும் எது வித சுவடுகளும் இன்று முற்றாக அழிப்பதில் ஈடுபட்டனர்.
போர்த்துகீசர்கள் இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்து அங்குள்ள செல்வங்களையும் சூறையாடினர். திருகோணேச்சரம் சீதாவாக்கையில் இருந்து பெரண்டிக் கோயில், தெய்வத்துறையில் இருந்த விஷ்ணு ஆலயம் போன்றவை போர்த்துகீசரால் இடிக்கப்பட்டது. கிறிஸ்தவன் அல்லாத எவனும் போர்த்துக்கல்லுக்கும், இயேசுநாதருக்கும் எதிரானவன் என கணிக்கப்பட்டான். இந்துகள் பலபந்தமாக தேவாலயங்களில் வழிபடச் செய்தனர். இக் காலத்தில் ரகசியமாக சூலங்களை வீட்டில் வைத்து வைரவர் வழிபாடு என்று இந்து மதம் இறந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டது. இதன் பின் வந்த ஒல்லாந்தர், போர்த்துக்கீசர் அளவிற்கு கொடுமைகள் இழைக்கா விடினும் இவர்களும் மட்டக்களப்பில் சில ஆலயங்களை அழித்தனர். பாடசாலைகளில் கிறிஸ்தவ சமயம் போதித்து கிறிஸ்தவர்களுக்கு ஆதரவளித்தமை. குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் இருந்த ஒல்லாந்த தளபதி தனது இறைச்சித் தேவைக்கு ஒவொருவரும் வீட்டில் இருந்தும் இறைச்சி அனுப்பப்பட வேண்டும் என்ற கட்டளைக்குப் பயந்து சுவாமி ஞானப் பிரகாசம் போன்றோர் இரவோடு இரவாக தமிழகம் சென்றதும் இக்காலத்திலேயாகும். ஆயினும் ஒல்லாந்தர் காலத்தில் பல சைவ ஆலயங்கள் மீளப் புதுப்பிக்கப்பட்டன. 1793ல் நல்லூர்க் கந்தசாமி கோயில், 1791ல் வண்ணார் பண்ணை வைதிஸ்வரர் கோயில் திருத்தி அமைக்கப்பட்டன. இக் காலத்தில் சைவப் பிரபந்தங்கள் பல யாழ்ப்பாணத்தில் எழுந்தன.
இவர்களைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் விவிலிய வேதத்தையும், பாதிரிமார்களையும், ஆங்கிலக் கல்வியையும் பக்கத் துணையாகக் கொண்டு சுதேச மதங்களை வலிகுன்ற வைக்கவும் தமது மதமான கிருஸ்தவத்தை பரப்பவும் முனைந்ததோடு சுதேச கலாச்சாரத்தை ஒடுக்கி தமது கலாச்சாரத்தை புகுத்தவும் முயன்றனர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர்.
1796ல் இலங்கையின் காரையோரப் பகுதிகளையும் 1815ல் கண்டி இராட்சியத்தையும் கைப்பற்றிய ஆங்கிலேயர் முழு இலங்கையையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தமது நோக்கங்களை நிறைவேற்றத் தொடங்கினர்.
அமெரிக்க மிஷன், வெஸ்லியன் மிஷன், மெதடிஸ்த மிஷன் என்பவற்றைச் சேர்ந்த பாதிரிமார் கிழக்கு நாடுகளில் தமது மதத்தையும், கலாச்சாரத்தையும் பரப்ப முயன்றனர். இது ஆங்கில அரசுக்கு வாய்ப்பாக அமைந்தது. இப் பாதிரிமார்களுக்கு நிதியும், ஊக்குவிப்புகளும், சலுகைகளும் நேரடியாகவே வழங்கப்பட்டன. இவை போதாதென்று பாதிரிமார்கள் தத்தம் நாடுகளில் நிதிதிரட்டியும் தம் குறிக்கோளை நிறைவேற்றினர். உடுபுடவை, உத்தியோகம், சமூக அந்தஸ்து இவற்றால் பொருளாதார வளர்ச்சி என்ற மாயைகளைக் காட்டி மக்களை தம்மதத்தின் பாலும் தம்கலாச்சாரத்தின் ஈர்த்தெடுதனர். மதமற்றதோடு ஆங்கிலக் கல்வியையும் இவர்கள் இலங்கையர் மத்தியில் புகுத்தினர்.
19ம் நூற்றாண்டில் இலங்கையில் இவ்வாறான சமய, சமூக நிலையைக் கண்டு சைவர்களிடையே ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுகநாவலர் பெளத்தர்களிடையே அநாகரிக தர்ம பாலா போன்ற பெரியோர்கள் தோற்றம் பெற்று இவ் இருவர்களது தன்னலமற்ற முயற்ச்சியால் இலங்கையில் சுதேச மதங்களான சைவமும், பௌத்தமும் புத்துயிர் பெற்றன. இவர்கள் மக்களிடையே சமய விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரங்களை மேற்கொண்டனர். துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர் கிறிஸ்தவ மத கண்டனங்களை செய்தனர். சமய நூல்களை அச்சிட்டு வெளியிட்டனர். இதனால் சமய விழிப்புணர்வு, தாய்மொழி பற்று, பண்பாட்டுணர்வு என்பன மேல் எழுந்தன.
2௦ம் நூற்றாண்டின் 1\2 பகுதிவரை ஆங்கிலேயர் ஆட்சி இலங்கையில் இடம் பெற்றது. இதனால் இலங்கையில் சமய, சமூக நிலைகள் 19ம் நூற்றாண்டில் காணப்பட்டது. போன்று கணப்பட்டதாயினும் ஆறுமுக நாவலர் போன்றோரது சமயப் பிரச்சாரங்களால் இந்து சமயம், இந்துப்பண்பாடென்பன உயிர்ப்புடன் காணப்பட்டது. சுதந்திரத்தின் பின் அரசியலில் இலங்கையர்கள் பங்குபற்றியதால் இலங்கையில் சுதேச மதங்களுக்கும், கலாச்சாரத்திற்கும் அரசியல் ஆதரவு கிட்டியது. இதனால் இந்து மதமும் பண்பாடும் வளர்ச்சி பெற்றது. ஆலயங்கள் புனருத்தாரனம் செய்யப்பட்டன.
விபுலானந்த அடிகள் இராமகிருஸ்ண இயக்கத்தில் இணைந்து பாடசாலைகளை உருவாக்கி இந்துக் கல்வியையும், பழக்க வழக்கங்களையும் பேண உதவினர். 19௦2ம் ஆண்டு கொழும்பில் விவேகானந்தா சபை நிறுவப்பட்டது. இது சமயக் கல்வியுடன் சைவப் பரீட்சைகளை நடாத்தி சான்றிதழ்கள் வழங்கி சமூகப்பணியும் புரிந்தது. சேர். பொன்னம்பலம் ராமநாதன் போன்றோர் பாடசாலைகளை நிறுவியதோடு ஆலயத்திருப்பணிகளையும் மேற்கொண்டனர்.
1889ம் ஆண்டு தோற்றம் பெற்ற சைவபரிபாலன சபையும் 2௦ம் நூற்றாண்டில் சமயப் பணி செய்த முக்கிய நிறுவனமாகும். யோக சுவாமிகள் போன்றோர் சிவதொண்டர் நிலையங்களை ஆரம்பித்து சமயப்பணி செய்தனர். இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் அரசியலில் இந்து கலாச்சார அமைச்சர்களாக இருந்து உலக இந்து மாநாடுகளை நடாத்தி இந்து சமய நூல்கள் பலவற்றை வெளியிட்டும் சமயப்பணி ஆற்றினர். கல்வி அமைச்சரால் இந்து அமைச்சர், இந்து நாகரிகம் போன்ற பாடங்கள் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டதோடு பாடநூல்களை அச்சிட்டு வழங்கியது. இதனாலும் இந்து சமய அறிவும், பண்பாடும் வளர்ச்சியடைந்தது. திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் போன்ற புராதன ஆலயங்களின் புனருத்தாரனம் செய்யப்பட்டது 2௦ம் நூற்றாண்டிலே ஆகும்.
இன்று இலங்கை எங்ஙனும் உள்ள சிறிய, பெரிய இந்து ஆலயங்கள் பலவும் புனருத்தாரனம் செய்யப்பட்டு வருகின்றன. சிற்பங்கள், தேர்கள், வாகனங்கள் போன்றன புதியனவாக ஆக்கப்படுகின்றன. பூசைகள், விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. கோயில்களில்த் திருமுறை ஓதுதல், பஜனை செய்தல், சமயச் சொற்பொழிவுகள் நடாத்துதல் போன்றவற்றின் மூலம் இந்துப் பண்பாடு வளர்ச்சியடைந்துள்ளது.