புராணங்கள்
புராணம் என்றால் என்ன?
புராணம் என்பது “ பழமையான வரலாறு” எனப் பொருள் படுகின்றது. புராணம் என்பதற்கு “பழமைக்குப் பழமையும் புதுமைக்குப் புதுமையும்’’ என பொருள்கொள்வோரும் உண்டு. மேலும் புராணம் என்பது அன்று தொடக்கம் இன்றுவரை நிலவிவருவது என்று வாயுபுராணம் கூறுகின்றது.
புராணங்களைப் பிறர் அறியுமாறு நந்தியம் பெருமான் சனற்குமார முனிவருக்கு உபதேசிக்க அவர் வியாசகருகும் பின் வியாசகர் நைமிசாரணிய வனத்திலுள்ள நாற்பத்தெட்டு முனிவர்களுக்கும் போதித்தார் என்று கூறப்படுகின்றது. புராணங்கள் ,மகாபுராணங்கள், தமிழ்மொழி புராணங்கள், தல புராணங்கள் என மூவகைப்படும். வடமொழிப் புராணத்தை மகா புராணம் என்றும் ஆதி புராணம் என்றும் கூறுவதுண்டு.
முழுமுதற்கடவுட் கோட்பாடு பக்திநெறி என்பவற்றை ஆதாரமாகக் கொண்ட சமயங்கள் வளர்ச்சி பெற்ற காலத்தில் அவற்றின் தத்துவங்களையும் மரபுகளையும் விளக்கும் வகையில் உருவாக்கபட்டவையே மகாபுராணங்கள் ஆகும். இம் மகாபுராணங்கள் இறைவன், ஆன்மா, உலகம், வழிபாடு, அருள், வீடுபேறு என்பவற்றை கதைகள் மூலம் விளக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. அரசியல், சமுதாய நெறி, தர்மம், தலம், சிற்பசாஸ்திரம் என்பன பற்றி இவை விரிவாகக் கூறுகின்றன.
மகாபுராணங்கள் ஐவகை இலக்கணமுடையனவாக விளங்குகின்றன. இவை பஞ்சலக்கணங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அவையாவன,
- சர்க்கம்- உலகின் தோற்றம்
- பிரதிசர்கம்-உயிர்த் தோற்றமும்,ஒடுக்கமும்
- வம்சம்-மன்னர் பரம்பரை
- மனுவந்திரம்-மனுக்களின் ஆட்சிக் காலங்கள்.
- வம்சியானுசரிதம்-மன்னர் பரம்பரையோடு கூடிய கிளைக் கதைகள் என்பனவாகும்.
மகாபுராணங்கள் 18 ஆகும். இவற்றில் சிவபுராணம்-10,,விஷ்ணு புராணம்-4,பிரம்ம புராணம்-2,சூரிய புராணம்-1, அக்கினிபுராணம் -01 ஆகும்.
சிவபுராணங்கள் | சிவபுராணம், பௌடியபுராணம்,மார்கண்டேய புராணம், இலிங்க புராணம், காந்த புராணம், வராக புராணம், வாமன புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரமாண்ட புராணம் |
விஷ்ணு புராணங்கள் | கருட புராணம், நாரதீய புராணம், வைணவ புராணம், பாகவத புராணம் |
பிரம்ம புரணாங்கள் | பிரம புராணம், பதும புராணம் |
அக்கினிபுராணம் | ஆக்கினேய புராணம் |
சூரிய புராணம் | பிரம கைவர்தன புராணம் |
இப் பதினெண் புராணங்கள் தவிர 18 உப புராணங்கள் மற்றும் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், தணிகைப் புராணம் போன்ற புராணங்கள் பலவும் தமிழில் உண்டு.
இலக்கிய மரபு:-
வேதம் இதிகாசம் ஆகியவற்றுடன் தொடர்பான கதாபத்திரத் தொடர்பே மகா புராணங்களில் காணப்படுகின்றது. அதாவது இந்துக்களின் இலக்கிய பாரம்பரியத்தில் வேதங்களையடுத்துச் சிறப்புப் பெறுவன புராணஇதிகாசங்கள் ஆகும்.அவை எழுந்த காலச் சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் காணப்பட்ட வழிபாட்டு முறைகள் சமய நம்பிக்கைகள் தொடர்பான கதைகள், ஐதீகங்கள் ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியனவாக இவை உள்ளன. பிற்காலத்தில் நாடகம்,காவியம் ஆகிய துறைகளுக்குக் கருவாக அமைந்த கதாபாத்திரங்களுக்கும் மகாபுராணங்கள் கருவாக உள்ளன.
புராணங்கள் உலகின் தோற்றம், ஒடுக்கம், மனுவந்தரம், பரம்பரை, அரசமரபு ஆகிய ஐந்தையும் கூறுவதால் பஞ்சலக்சனம் எனப்படும். புராணங்களின் பஞ்சலக்கணக் கருத்துக்கள் இலக்கிய மரபுக்குஅடிப்படையானவை. மகாபுராணங்களுக்கும் அவற்றோடு தொடர்ந்து எழுந்த மகாத்மியங்கள், தலபுராணங்கள் என்பவற்றுக்கிடையேயான தொடர்பினை இலக்கிய மரபு என்பதன் வாயிலாக விளங்கிக்கொள்ள முடிகின்றது.
புராணங்கள் கூறும் கருத்துக்களை மேலும் சுவை படவிளக்குவதற்காக தலங்களின் புகழ்பாடும் தலபுராணங்கள் என்பவருக்கிடையேயான தொடர்பினை இலக்கிய மரபு என்பதன் வாயிலாக விளங்கி கொள்ள முடிகின்றது.
புராணங்கள் கூறும் கருத்துக்களை மேலும் சுவை பட விளக்குவதற்காகவே தலங்களின் புகழ்பாடும் தலபுராணங்கள், மகிமை கூறும் மகாத்மியங்கள் என்பவை தோன்றுவதற்கும் இப்புராணங்களே அடிப்படையானவை. அகத்தியர், நாரதர், விசுமாமித்திரர் முதலியோர் கதைகளே பிற்கால இலக்கிய மரபு தோன்றுவதற்கு ஏதுவாக அமைந்தன. தல புராணங்கள் என்பவை சிதம்பரம், காஞ்சி, திருவானைக்கா, திருவாரூர், திருவாலவாய் முதலிய கோயில்களின் வரலாறும் அவ் ஆலயத்தின் மகிமையையும் கூறுகின்றன.
மதுரைச் சோமசுந்தரப் பெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறுவதுதிருவிளையாடற் புராணம் ஆகும். பெரியபுராணம் 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் சிவனடியார் சரித நூலாகும். வடமொழியில் காணப்பட்ட ஸ்கந்த புராணத்தின் தழுவலாக அமைந்த கந்த புராணம் முருகப் பெருமான் அசுரர்களை வதை செய்த கதையினைக் கூறுகின்றது.
புராணங்களில் காணப்படுகின்ற கருத்துக்களையொட்டி காவியங்களான இரகுவம்சம்.சாகுந்தலம், இராதர்ச்சானியம் முதலியன தோற்றின. மற்றும் சிற்ப சாஸ்திரம் முதலிய கலை நூல்களிலும் தோத்திரப் பாடல்களிலும் இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு மொழிகளிலும் இவற்றின் செல்வாக்கை நாம் உணர முடிகின்றது. கோவில்களில் காணப்படுகின்ற சிற்பங்கள் ஓவியங்கள் யாவும் புராணங்களில் கூறப்பட்ட இறைவனின் திருவுருவ அமைப்பை கருதியே உருவாக்கப்பட்டுள்ளன.
நாயன்மார் ஆழ்வார்களின் திருமுறைகள்,திருப்பாசுரங்கள் என்பவற்றிலும் பின்னர் எழுந்த சிற்றிலக்கியங்களாகிய பிரபந்தம் முதலியவற்றிலும் புராணக்கதைகள் இழையோடியுள்ளன.பல்லவர் காலத்தில் இறைவன் பற்றிய உண்மைகளை மக்களுக்கு புலப்படுத்துவதற்காக வட மொழியில் காணப்பட்ட புராணங்களில் காணப்பட்ட கருத்துக்களையும் தமது திருபாசுரங்களில் நாயன்மார்கள் பயன்படுத்தியுள்ளமையினை அறியலாம். அது மட்டுமின்றி ஆரம்பகாலச் சினிமாதுறை வளர்சிக்கும் இப்புராணங்கள் காரணமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது. திருவிளையாடல்,கந்தபுராணம் முதலிய இறைவன் பெருமையைக் கூறும் பக்தி திரைப்படங்களை இதற்கு ஆதாரங்களாகக் கூறலாம்.
சமய நெறி
இந்து சமயத்தை பூரணமாக அறிவதற்கு புராணங்களே இந்துசமயத்தின் கருவூலங்களாக விளங்குகின்றது. சைவ, வைணவமரபுகளைக் பிரதிபலிப்பனவாகவே புராணங்கள் அமைந்துள்ளன. இதில் சிவன், விஷ்ணு வழிபாடுகளே அதிகமாக உள்ளன. ஆனால் சிவ- விஷ்ணு வழிபாட்டுடன் வினாயகர், அம்மன், முருகன், சூரியன் வழிபாடுகளும் சிறப்புப் பெறுவதைக் காணமுடிகின்றது.
சைவர்கள் தாம் வணங்கும் சிவன் இத்தகையவன் என மனத்தில் எண்ணித் தியானிக்கவோ, வழிபடவோ தேவையான அனைத்துக் கருத்துகளையும் தருவன புராணங்களேயாகும். பெயர், உருவம் ஆகிய இரு வரையறைகளுக்கு அப்பாற்பட்ட இறைவனுக்கு பல பெயர்களை இட்டும்,அவனுக்குப் பல திருவுருவங்களைக் கற்பித்தும் வழிபடுவதற்கு வழிகோலிய அறிவை விருத்தி செய்து தருவதற்கு புராணங்கள் இன்றியமையாதவை ஆகும்.
ஆகமங்கள் சுருங்க கூறும் கருத்துகளுக்கு புராணங்கள் விளக்கங்கள் போல் அமைந்துள்ளன. சிவபெருமான் முக்கண்ணன், விட ஊர்தி, விரிசடைக்கடவுள் , எண்தோள் வீசி நின்றாடும் பிரான் நீலகண்டன், இறைவி அவனுடைய உடலில் பாதி பற்றியுள்ளாள், சூலப்படையுடனும், வில்லைத் தாங்கியும், புலித்தோலை உடுத்தும்,சுடலைப் பொடி பூசியும்அவ்வப்போது தோன்றுவான் என இறைவனது திருகோலங்களுக்கு அமைய விரித்துக் கூறுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டே திருவுருவங்களை இந்துக்கள் அமைத்து வழிபடுகின்றனர்.
இறைவன் செய்த திருவிளையாடல்களையும் புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன. சிவன் நடராஜமூர்த்தி வடிவம் கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடி ஐந்தொழில்களைச் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. இறைவனின் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் பற்றிய லிங்க புராணம் கூறுகின்றது. அதர்மங்களை அழித்தபோது பயங்கர உருவங்களை இறைவன் கொண்டதாக மச்சய, பாகவத புராணங்கள் கூறுகின்றது. சிவனின் முக்கண் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை பற்றி மச்ச புராணம், பத்ம புராணம், கூர்ம புராணம் ஆகியன எடுத்துக் கூறுகின்றன.
பாகவத புராணத்தில் விஷ்ணுவின் அவதாரம் பற்றி பேசப்படுகின்றது. அறத்தை நிலைநாட்ட பகவான் அவதாரம் எடுப்பதாக கூறுகின்றார். பகவானின் அடியார்களின் பக்தித் திறம், அவர்களின் பெருமை முதலினவும் விரித்துப் பேசப்படுகின்றது. பக்தி மார்க்கம் பற்றியும் விபரிக்கப்படுகின்றன. பிரகலாதன், ஆரூச்சுனன் முதலிய அடியார்களின் வரலாறும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
புராணங்கள் பிராமணகளை உயர்நிலையில் வைக்கின்றது. மன்னர்களும், ரிசிகளும் யாகம் செய்த வரலாறுகளையும் புராணங்களே விளக்குகின்றது. யாகத்தைக் காட்டிலும் தவத்திற்கு புராணங்கள் முக்கிய இடமளிகின்றது. சிவனை அடைவதற்கு உமாதேவியார் செய்த தவத்தினையும், தாட்சாயினி தவம் செய்த வேளையில் நடைபெற்ற சகல விடயங்களையும்மச்சய புராணம் கூறுகின்றது.
தீர்த்தம் பற்றியும், தீர்த்தமாடுவதனால் கிடைக்கும் பயன் யாகத்தினை விடப் பெரியதாகவும் சிறந்ததாகவும் அமையுமெனவும், தீர்த்தத்திலே நீராடுவதால் பாவங்கள் நிங்கும் சகல கதைகளையும் புராணங்கள் கூறுகின்றன. தியானம் பற்றிய விடயங்களை கூர்மபுராணம் மற்றும் சிவபுராணம் என்பன கூறுகின்றன. விரதத்தின் மகிமை மற்றும் அவற்றின் வரலாறுகள், அவை கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும் புராணங்கள் விளக்குகின்றன. அக்கினி புராணத்தில் வினாயகர் விரதங்கள் பற்றி விளக்கப்படுகின்றது.
மேலும் ஆலய வழிபாடு,தலச்சிறப்பு, தலயாத்திரை, தோத்திர முறைகள் முதலிய அம்சங்களையும் புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.
வம்ச வரலாறுகள்
புராணங்கள் பஞ்சலட்சணங்கள் பற்றிக் கூறுகின்றன. அவற்றுள் வம்சம்,வம்சானு சரிதம் என்பவை மிகச் சிறப்பானவையாகும்.யுத்தங்கள் மேற்கொள்ளப்படும்போது அரசியல் வரலாறுகள் மிக முக்கியமானவை. அந்த வகையில் அரச வம்சங்களான நந்தர். மோரியர், சுங்கர், சாதவாகனர் ஆகிய அரச குலங்கள் முக்கியமானவையாகும். விஷ்ணு புராணங்களில் நந்தர் பரம்பரையப் பற்றி கூறப்படுகின்றது. கண்ணன் நந்தர் குலத்தில் பிறந்து வளர்ந்த கதைகள் குறிப்பிடத்தக்கவை.
பாகவத புராணம் 1800000 கிரந்தங்களை கொண்டது. இது பரீட்சித்தின் சாபம், சுகர்.உபதேச,கண்ணன் சரிதை, மனுவந்தரம், சூரியவம்சம், பூருயயாதி, பிரியவரதன் ஆகியோர் மற்றும் மரபு, புவி தருமம் முதலியவை பற்றியும் உரைக்கின்றது. விஷ்ணு புராணம் 6000 கிரந்தங் கொண்டது. இது வம்சம், மனுவந்தரம்,கிருஸ்ன பலராம சரித்திரம், பிரபஞ்ச சிருஷ்டி. சீவசற்புத்தி, கற்பாந்தம், அண்ட கோசம், சுவர்க்க நரக லட்சணங்கள், கிரக மண்டலம், சப்த காண்டம், இராஜ பரிபாலனம், சாதி ஒழுக்கம், யுகவரலாறு, சல அக்கினிப் பிரளயங்கள் என்பவை பற்றிய செய்திகளைக் கூறுகின்றது.
இலிங்கபுராணம் சிலர்களுடைய சீலம், ஐசுவரியம், சுகமோட்சம், அண்டகோசம், மனுவந்தரம் முதலிய செய்திகளைக் கூறுகின்றது. புராணங்களில் யுகங்கள் பற்றி குறிப்பிடும்போது அரச வம்சங்கள் சுட்டிக் காட்டபடுகின்றன. மகதம், கோசலம் ஆகிய இடங்களில் அரசவம்சங்கள் செல்வாக்கடைந்தன. சந்திர வம்சம், சூரிய வம்சம் முதலிய அரச வம்சங்களும் குறிப்பிடப்படுகின்றன. நந்தர், மோரியர், சுங்கர், சாத வானகர் முதலியோரின் ஆட்சிக் காலங்களிலும் குறிப்பிடப்படுகின்றன. அத்துடன் குப்தமன்னர்களின் ஆட்சிச் சிறப்பு பற்றியும்விளக்கப்படுகின்றது.
கோவிற் சிற்பங்கள்:-
கோவில்களிலே சித்தரிக்கப்படுகின்ற சிற்ப வேலைப்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்குபவை புராணக் கதைகளாகும். திரிபுராந்தகர், காமாந்தகர், லிங்கோற்பவர் முதலிய சிவ வடிவங்கள் செதுக்கப்படுவதற்கு புராணக் கதைகளே மூலாதாரங்களாக விளங்கியுள்ளன. சிவனின் வடிவங்கள் மாத்திரமின்று விஷ்ணுவின் வடிவங்கள் மற்றும் சக்தியின் வடிவங்கள் என்பனவும் கூட புராணங்களின் துணையுடன் சிற்பங்களாக செதுக்கபடுகின்றன.
வைணவ சிற்பம் பாகவதபுராணக் கதைகளின் மூலம் பெறப்பட்டவையாகும். குறிப்பாக நரகாசுரன் தொடர்பான கதைகளும் சிற்ப வடிவங்களின் உருவாக்கத்திற்கு காரணமாயின. சக்தியின் மகிடாசுர மர்த்தன வடிவங்களும் புராணக்கதைகளுடன் மிகவும் தொடர்புபட்டவையாகும். முருகக் கடவுள் பற்றிய கருத்துக்கள் சிவபுராணம் மற்றும் கந்தபுராணம் முதலியவற்றிலிருந்து பெற முடிகின்றது. எனவே புராணங்கள் இந்து சிற்பக் கலையின் மூலாதாரமாக விளங்குகின்றது எனக் கூறில் அது மிகையில்லை.
உலகம்(பிரபஞ்சம்)
இந்து சமயத்தில் புராணங்கள் பிரபஞ்ச உற்பத்தி பற்றிய விளக்கத்தைக் கூறுகின்றன. புராணங்களில் உலகத்தின் உருவாக்கம் சர்க்கம் என்ற பகுதியிலும், உலகம் அழிந்து மீண்டும் உருவாதலை பிரதி சர்க்கம் என்ற பகுதியிலும் காணலாம். தூயநியதி, அறநியதி, அருள்நியதி எனப் பிரித்துப் பார்க்கும் பொழுது தூயநியதியில் பூமியின் நிலப்பகுதி,நீர்ப்பகுதி பற்றிய விளக்கங்களை, தோற்றத்தை விளக்குகின்றன. மேலும் வானத்தில் உடுக்கள், கிரகங்கள் பற்றியும் வடதுருவம், தென்துருவம் முதலிய விடயங்களும் காணப்படுகின்றன. சூரிய கிரகணம், சந்திர கிரகணங்களின் இயல்புகள் கூறப்பட்டுள்ளன. மாதம், ருது, வருஷம். யுகம், மனுவந்தரம், கல்பம் என்பன அருமையாகக் கணித்துக் கூறப்பட்டுள்ளது.
ஏழுகடல்களும், ஏழு உலகங்களும் இருப்பதாகவும், அந்த உலகங்களில் நாவலந்தீவு முக்கியமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு உலகம் எனக் குறிப்பிடப்படுவது கண்டங்களாக இருக்கலாம் எனக்கருதப்படுகின்றது. நாவலந்தீவுக்கு அண்மையில்சுவர்ண பூமி உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டது. உலகில் நாவலந்தீவுக்கு அதன் மையத்தில் இருப்பதகாவும் கூறப்பட்டுள்ளது.