மனித இனத்திற்கு ரெட் அலர்ட் 2030-க்குள் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்

மனித இனத்திற்கு ரெட் அலர்ட் 2030-க்குள் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும்

அமெரிக்கா, துருக்கி , பொலிவியா , கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ, சீனாவில் வெள்ளம், ஒரு புறம் வறட்சியில் சிக்கி தவிக்கும் நாடுகள், பருவம் தவறிய மழை – இப்படி உலக நாடுகள் வழக்கத்துக்கு மாறான வானிலை மாற்றங்களை சந்திக்க காரணம் என்ன? புவி வெப்பமயமாதல்தான் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பூமியின் வெப்பம் முன்பு கணித்ததை விட அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் விளைவினை மனித இனம் தற்போதே அனுபவித்து வருகிறது என்பதற்கு பெரு வெள்ளம், காட்டுத்தீ, வறட்சி உள்ளிட்டவைகளே உதாரணம் என்கின்றனர். இந்த நிலை மேலும் மோசமடையும் என்பது தான் ஐநா பருவநிலை மாற்றத்துக்கான குழு மனித குலத்திற்கு விடுத்திருக்கும் எச்சரிக்கை.

புவி வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பாக 234 விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கும் 3 ஆயிரம் பக்க அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் நாம் முன்பு கணித்த அளவை விட புவியின் வெப்பம் உயருமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதாவது 2030ஆம் ஆண்டிலேயே புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் என்கின்றனர். இதன் விளைவு மோசமாக இருக்கும் என்றும் இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.

50 வருடங்களுக்கு ஒரு முறை வீசி வந்த அனல் காற்று தற்போது 10 வருடங்களுக்கு ஒரு முறை வீசத் தொடங்கியுள்ளது. இனி 3 வருடங்களுக்கு ஒரு முறை உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் அனல் காற்று வீசும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக , கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை தடுக்காவிட்டால், நமது வருங்கால சந்ததியை காப்பாற்ற வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என கூறும் விஞ்ஞானிகள் நிலைமை கை மீறி சென்றுவிட்டது என்பதை மனித குலம் உணர வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

காடுகளை அழிப்பது, அதிக புகை வரும் வாகனங்களை பயன்படுத்தி காற்றை மாசுபடுத்துவது என பூமியின் வெப்பம் அதிகரிக்க தெரிந்தும் தெரியாமலும் நாம் ஒவ்வொருவரும் பங்காற்றி வருகிறோம். இதன் விளைவை நாம் மட்டுமல்ல எதிர்கால சந்ததிகளும் அனுபவிக்க போகிறார்கள் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks