பொலநறுவைக்காலத்தில் இந்து மதம்

பொலநறுவைக்காலத்தில் இந்து மதம்

காலப்பின்னணி

கி.பி.10 – 13 வரையான காலமாகும். கி.பி. 985 – 1255 வரையான கலிங்க மாகோன் காலமாகும். இதில் கி.பி.985 – 1070 வரை சோழர் இலங்கையில் பொலநறுவையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர் இவர்கள் காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த சோழர் கட்டிட சிற்ப கலைஞர்கள், பிராமணர், வணிகர், கம்மாளர், போர்வீரர்கள் என பலரையும் குடியேற்றினர். இதனால் இந்து கோயில்கள் புதிதாக அமைக்கப்பட்டும் பாடல் பெற்ற தலங்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டும் திராவிட பாணியில் கட்டடக்கலை வளர்ந்தது.

பிராமணக்குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டு இந்துக்கிரியைகள் வளர்க்கப்பட்டன. சிற்ப உலோக படிமக்கலைகள் வளர்ந்தது. இவர்களின் காலத்தில் பொலநறுவை தலைநகராக விளங்கியது. இக்காலத்தில் குளக்கோட்டன் கலிங்க மாகோன் போன்ற இந்துக்களும் பராக்கிரமபாகு, கஜபாகு, விஜயபாகு முதலான பௌத்த மன்னர்களும் இந்து மதத்திற்கு ஆதரவு வழங்கினர்.

இலங்கையில் சோழர் இந்துக்கோயில் வளர்ச்சி

இக்காலத்தில் இவர்கள் பொலநறுவையை தலைநகராக்கி ஆட்சி செய்தனர். பொலநறுவையில் 10 சிவன் கோயில் 5 விஷ்ணு கோயில் 1 துர்க்கை கோயில் அமைக்கப்பட்டது இதில் 2ம் சிவ தேவாலயம் 5ம் சிவ தேவாலயம் என்பன குறிப்பிடத்தக்கவை. 2ம் சிவ தேவாலயமான வானவன் மாதேவி ஈச்சரம் வீரராஜேந்திரசோழனால் அமைக்கப்பட்டது.

ஆதகட என்னும் இடத்தில் உத்தம சோழேச்சரம், மெதிரிகிரிய என்னுமிடத்தில் பண்டித சோழேச்சரம் அமைக்கப்பட்டது.விக்கிரமசாலா மேகபுரம் என்னுமிடத்தில் விக்கிரமசாலா மேகேஸ்வரம் அமைக்கப்பட்டது. அதில் பதவியாவில் 6 சிவாலயங்கள் அமைக்கப்பட்டது. இதில் இரகுல மாணிக்க ஈஸ்வரம் இராஜ இராஜன் ஆட்சியில் அமைக்கப்பட்டது.

நாட்டின் பல பாகங்களிலும் இந்துக்கோயில் அமைக்க நானாதேசிகர் என்ற வணிக கனமும் ஆதரவு வழங்கியது.திருக்கேதீஸ்வரம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இராஜஇராஜேஸ்வரம் என்றும் கோணேஸ்வரம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மச்சகேஸ்வரம் எனவும் அழைக்கப்பட்டது.

யாழ்ப்பாண கோட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட முதலாம் இராஜேந்திர சோழன் சாசனம் நல்லூரில் இருந்த ஆலயம் ஒன்றிற்கு தானம் கொடுத்தமை பற்றி கூறுகிறது.

மேலும் பூநகரியிலுள்ள மன்னித்தலை என்ற இடத்தில் உள்ள சிவாலயமும் சோழர் காலத்தை சேர்ந்தது என ஆய்வுகள் நிரூபிக்கிறது.

இந்துக்கிரியை வளர்ச்சி

இந்தியாவில் இருந்து பிராமணர் வரவழைக்கப்பட்டு இந்து ஆலயக்கிரியைகள் நடை பெற்றது. இவர்கள் குடியிருந்த இடங்கள் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது.

உதாரணம் : பொலநறுவையில் இராஜ இராஜன் சதுர்வேதி மங்கலம் பொலநறுவைக்கு வடக்கே ஐயம் கொண்டார் சதுர்வேதி மங்கலம் அமைக்கப்பட்டதை கூறலாம்.

இவர்களே சிவாலயங்களில் கிரியை செய்பவர்களாக காணப்பட்டனர். இவர்களுக்கு சிவப்பிராமணர் என்ற பட்டமும் மன்னனால் வழங்கப்பட்டது.

பட்டர் தேவகர்மியர் என்போர் ஆலயங்களில் திருமுறைகள் பாடும் தேவரடியார்களாக நியமிக்கப்பட்டனர்.

ஐந்நூற்றுவர் என்ற வணிக கனம் பூசைக்கு தேவையான அகில், கற்பூரம், சீலப்பட்டு, சந்தனம் என்பவற்றை தாரளமாக இறக்குமதி செய்து வழங்கினர்.

இந்து உலோகப்படிம கலை

வைஜெயந்தி சூத்திரம் என்ற சிற்ப நூல் இக்காலத்தில் எழுதப்பட்டது. முன்னர் ஒரு போதும் இல்லாத அளவுக்கு பொலநரறுவைக்காலத்தில் சைவ திருவுருவங்கள் வார்க்கப்பட்டது.

இதன்படி கடவுளர், நாயன்மார், அடியார் என பல உலோக படிமங்கள் இரு ஆய்வுகளின் மூலம் 1ம், 2ம், 3ம், 4ம், 5ம் சிவ தேவாலயங்களில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சங்கு, மணி, தூவக்கல், தாம்பாளம் முதலான பூசை பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடவுளர் விக்கிரகங்களில் நடராஜர், வீரபத்திரர், வைரவர், விஷ்ணு, பார்வதி, அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சோமஸ்கந்தர் முதலானோரை கூறலாம்.

நாயன்மார் படிமங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் போன்றோர் படிமங்கள் பல்வேறு அளவுப் பிரமாணங்களில் பல கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அடியார் படிமங்களில் காரைக்கால் அம்மையாரின் என்புருவான படிமம், சண்டேஸ்வரர் படிமம் என்பன.

பொலநறுவைகாலத்தில் குளக்கோட்டன் பணி

தட்சணகைலாய புராணம் குளக்கோட்டன் பணிகளை பற்றி கூறுகிறது.இவன் விமானம், எழில் மிகு மண்டபம், கோபுரம் ஆகியன பொருந்திய மகத்தான மண்டபத்தையும். மழை நீரை தேக்கும் பாவநாசம் என்னும் அணையினையும் குளக்கோட்டன் என்ற சோழ கங்க தேவன் அமைத்தான் என்று கூறுகிறது.

கோணேசர் கல்வெட்டில் குளக்கோட்டன் இந்து ஆலயக்கிரியைக்கு வயல்களை வழங்கியதுடன் அவ்வயல்களுக்கு நீர் கிடைக்க கந்தளாய் குளம், அல்லை குளம், வெண்டரசன் குளம், என்பவற்றையும் வெட்டிக் கொடுத்தான்  என கூறுகிறது.

கலிங்கமாகோன்

மட்டக்களப்பு பூர்வீக சரித்திரத்தில் இவன் சிவாலயத்தில் ஊழியம் செய்ய வெள்ளாளரை 7 குடிகளாக வகுத்து அவர்கள் செய்ய வேண்டியவற்றையும் திட்டமிட்டான் என்று கூறுகிறது. சைவத்தில் பேரபிமானம் கொண்டவன். இவன் காலத்தில் கிழக்கில் வீரசைவத்தின் பிரதான அம்சங்கள் அறிமுகமாகியது.

13ம் நூற்றாண்டில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் விமானம், சித்திர வேலாயுதர் சுவாமி கோயில், திருப்பெரும்துறை, அமிர்தகழி கோயில்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகிறது.

பௌத்த மன்னர் பணி

விஜயபாகு

இவன் கந்தளாயில் விஜய ராஜேஸ்வரம் என்ற ஆலயத்தை அமைத்ததுடன் கந்தளாய் இவன் காலத்தில் விஜயராஜசதுர்வேதிமங்கலம் எனவும் அழைக்கப்பட்டது.

நிசங்க மல்லன்

கந்தளாய் சதுர்வேதி பிரம்மபுரம் என அழைக்கப்பட்டதுடன் பார்வதி சத்திரம் என்ற தான சாலையும் அமைத்தான். அத்துடன் அங்குள்ள தேவாலயமொன்றின் உற்சவ காலத்தில் இடம் பெற்ற நாட்டிய காட்சியையும் பார்த்தான் என அவன் சாசனம் கூறுகிறது.

விக்கிரமபாகு

இவன் மனைவிகளில் ஒருத்தி கலிங்க நாட்டை சேர்ந்த இந்துப்பெண் திரிலோகசுந்தரி. இவன் பௌத்த மதத்திற்கு எதிராக இந்து சமயத்திற்கு ஆதரவு வழங்கினான் என்று மகாவம்சம் கூறுகிறது.

கஜபாகு

தமிழ் சாசனம் இவனை விக்கிரமபாகுவின் மகன் எனவும் இவன் சைவனாக இருந்து பிராமணருக்கும், பிரமதேயங்களுக்கும் ஆதரவு வழங்கினான் எனவும் பிராமணரை அவை புரோகிதராகவும் கோணேசர் கோயில் அர்ச்சகராகவும் நியமித்தான் என்றும் கூறுகிறது.

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks