வரலாற்றுக்கு முற்பட்ட காலம் [ கி.மு 2000 – கி.மு 600 ]
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் இந்து மதம். இலங்கையில் ஆதிக் குடிகள் சிங்களவர் என்றும் இலங்கை வாழ் தமிழர் வந்தேறு குடிகள் என்றும் மகாவம்சத்தை ஆதாரமாகக் கொண்ட திரிவுக் கருத்து நீண்ட காலமாய் நிலவி வந்தது. ஆனால் தொல்லியல் ஆய்வுகள் கி.மு. 2000ம் ஆண்டளவில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பெருங்கற் பண்பாடு நிலவியமை தெரியவந்துள்ளது. இப் பண்பாட்டிற்குரியோர் திராவிட இனத்தைச் சேர்ந்த தமிழர் என்பது வரலாற்று உண்மையாகும்.
தென் இந்தியாவிலே அதிச்ச நல்லூர், திருநல்வேலி ஆகிய இடங்களிலே நடத்தப்பட்ட ஆகழ்வாராட்சியில் ஈமத்தளிகள் (இறந்தோர் உடலை அஸ்தியை புதைக்கப் பயன்படுத்திய மட்பாண்டம் ) காவடிச் செதில்கள், சேவல்ச் சின்னங்கள், வேல் போன்றன கண்டுபிடிக்கப்பட்டன. இவை ஆதித் தமிழ்க் குடிகள் பயன்படுத்தியவை இவை கி.மு 2000ம் ஆண்டைச் சேர்ந்தவை இவை போன்ற பொருட்கள் 1955ம் ஆண்டிலே புத்தளப் பகுதியில் நிகழ்ந்த புதைபொருள் ஆய்விலும் கிடைத்தன. மற்றும் பொன்பரிப்பு, வளவகங்கைப் பள்ளத்தாக்கு, கதிரைவெளி, வல்லிபுரம், வரணி, மாதோட்டம், கந்தரோடை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. இதிலிருந்து இவை அன்று வாழ்ந்த தமிழ் மக்களாலேயே கைக் கொள்ளப்பட்ட வழிபாடென்பது புலனாகிறது. இது தென் இந்தியப் பின்னணியில் அமைந்த இந்துப் பண்பாடென்பது புலனாகிறது.
இலங்கை வேடரின் மூதாதேயரான இயக்கர் வாழ்ந்தனர் எனவும் இவர்கள் அமனுஸ்யர்கள் எனவும் அதாவது பூசிக்க தகுந்தோர் எனவும் ( யகூஷ் – பூசிக்கத் தகுந்தோர் ) கொள்ளப்பட்டதனால் யகூஷ் வழிபாடும் அக் காலத்தில் இடம் பெற்றதாய் ஆய்வாளர் கொள்வர். இவர்களிலும் விட நாகரிகத்தால் உயர்ந்த நாகர்கள் நாகத்தினை வழிபட்டனர். என்றும் கூறப்படுகின்றது. யகூஷ் வழிபாடு பிற்கலத்தில் பூத வழிபாட்டுக்கு வழிகோலியது தமிழகத்துக் கொற்றவை வழிபாட்டிலிருந்து பத்தினி வழிபாடு நாச்சிமார் வழிடெல்லாம் தோற்றம் பெற்றது. திருமாளாகிய மாயோனின் வழிபாடு பற்றியும் “ ஆதிபிராமிக் “ கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.
ஆக இலங்கையிலே இன்று நிலவும் இந்து சமயத்தின் மூலக்கூறு பலவும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே கருவாகி உயிர்க் கொண்டு விட்டன என்பது மேற் குறித்த செய்திகளில் இருந்து புலனாகின்றது.